சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் போகர் என்பதாகும். மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், இரசவாதம், காயகல்ப முறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர் மகாகுரு போகர் தான்.அகத்தியர் இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம் குறிப்பிடுகிறார். சமயத்திற்கு உதவியவர்களை பார்த்து கடவுளைப் போல உதவினீர்கள் என்றும் என் வரையில் நீங்களே கடவுள் என்றும் கூறுவோம் அல்லவா? அப்படித்தான், போகரின் செயல்திறனை பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். உண்மையில் முதல் சித்தன் அந்த ஆதி சிவன் தான். அவரே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றார். போகரைப் பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன.பொதுவாகவே சித்தர் எனப்படுபவர்கள் இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதை எல்லாம் விடுத்து தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில் போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகின்றார்.5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர் ஆவார். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதம் பரணி நட்சத்திரம் போகரின் பிறந்த நட்சத்திரமாக குறிப்பிடப்படுகின்றது. போகரின் பிறப்பு பற்றி நிறைய தகவல்கள் இன்னும் வெளி உலகிற்கு தெரியவில்லை.ஆனால், நவநாத சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் என்ற சித்தரின் சீடர் ஆவார். இதனை, போகர் 7000 என்ற நூலின் வழியே அறியலாம். மற்றும், 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். பழனியில் இருக்கும் நவபாஷான பாலதண்டாயுதபாணி சிலையை செய்தவரும் இவர்தான்.
போகர் - BOGAR
பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பே நவ சித்தர்களே பிரதானமாக கருதப்பட்டனர். மேருமலை தான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும், இமயமும் உலகப்பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் காலாங்கிநாதர். போகர் மேருமலை தளத்திற்கு வந்தபொழுது காலங்கிநாதர் மகா சமாதியில் இருந்தார். ஒரு புற்றினுள் மிகப்பெரும் ஒளிப்பிழம்பு வெளிப்படுவதை அறிந்த போகர் புற்றின் முன்பாக அமர்ந்து உள்ளே இருந்த காலங்கிநாதரை நினைத்து தியானிக்க தொடங்கினார். அதன் பலனாக புற்றிலிருந்து வெளிப்பட்ட காலங்கிநாதர், போகர் மீது பெரும் கனிவு கொண்டு ‘அமிர்தமணிப்பழம்’ எனும் தேவக்கனி மரம் ஒன்றை போகருக்குக் காட்டி அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட, போகர் அந்த கனிகளை உண்டு உடம்பின் பிணி ஆகிய பசி, தாகம், மூப்பு என்கிற மூன்றில் இருந்தும் விடுதலை பெற்றார். அதோடு ஒரு பேசும் பதுமையையும் காலங்கி நாதர் போகருக்கு வழங்கினார். பின்னர், காலங்கிநாதர் மீண்டும் தனது நீண்ட தவத்திற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.
BOGAR
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec porta, mi ut facilisis ullamcorper, magna risus vehicula augue, eget faucibus magna massa at justo. Sed quis augue ut eros tincidunt hendrerit eu eget nisl. Duis malesuada vehicula massa... Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec porta, mi ut facilisis ullamcorper, magna risus vehicula augue, eget faucibus magna massa at justo. Sed quis augue ut eros tincidunt hendrerit eu eget nisl.
அந்தப் பதுமையானது மூலிகை இரகசியங்கள், உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போதே பதுமை மறைந்தும்விட்டது.போகர், காலாங்கி நாதரை வணங்கி மலைகளில் உள்ள பல தாது வகைகளை தேடி கண்டுகொண்டார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து அதனை தானே உண்டு பார்த்து அதன் பலன்களையும் அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும் வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் அவருக்கு மிக மிக சாதாரணமான செயல் ஆகியது. இதனால் போகருக்கு சிறிது கர்வம் துளிர்த்து விட்டது. துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்டேன் என்ற எண்ணத்தில், உண்மையிலேயே காலங்கிநாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் அந்த மலைத்தளத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர் நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும், இமையத்திலும் சூட்சும வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம் போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். அதனைக் கண்டு திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலங்கி நாதரின் மாணவர்கள் பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனையும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூறவே போகருக்கு அது அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியமான செய்தியானது. அப்படியானால், அவர்கள் செய்யும் தவம் எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது.அந்த நொடி தான் கற்ற வித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த சித்த புருஷர்கள் போகருக்கு பல சித்த இரகசியங்களை போதித்தார்கள்.இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.’தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு’. ‘அவர்களை நீண்ட காலம் வாழவை’. ‘மரணமடைந்தவர்களுக்காகவும், மரணத்திற்காகவும் மனதைக் குழப்பிக் கொள்ளாதே’ என்று அவர்கள் அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத பலவிதமான காயகல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து பின்னர் மறைந்தனர்.
இவ்வாறு படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பான கேள்விகளே ஆகும். ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பு எடுக்கின்றது? அப்படி பிறக்கும் போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், செல்வந்தனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாள் முழுவதும் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை? இவ்வாறு பலவித கேள்விகள் போகரை ஆட்டிப் படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தார். மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வளர்ந்தோங்கியது. இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை இரகசியங்களை நூலாக எழுதினார். அவைதான் போகர் 7000, போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.
போகரின் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும் அரிய குறிப்புகள் இயற்கையாகவே தோன்றின அதேசமயம் போகருக்கு எதிர்ப்பும் தோன்றியது பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர் சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர் மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றிலுமாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூறினார்கள் போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை சஞ்சீவி மூலிகை ஒருவர் கையிலும் அகப்படாத படி விலகி ஓடும் இயல்பு உடையது அதனை அறிந்த போகர் சஞ்சீவி மூலிகையை ஒரு மந்திரத்தால் கட்டி அதனை கைப்பற்றி காட்டினார். அந்த மந்திரம் ‘தம்பணா மந்திரம்’ என அழைக்கப்படுகிறது.அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே போகர் கண்டறிந்தார். அதனைக்கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமும், அமிர்தமும் தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ, மனிதர்களோ அதனை உண்டால் உலகம் அழிந்துவிடக்கூடிய அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.அதேவேளையில் போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார்.மற்ற சித்தர்கள் “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இந்த செயலை அவர் உடனே நிறுத்த வேண்டும் என்று தட்சிணாமூர்த்தியாகிய சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமானும் அவர்களது கவலையை நீக்கும் முகமாக போகரை அடைந்து அவர் எழுதிய அவ்வளவு இரகசியங்களையும் கேட்டறிந்தார்.தட்சிணாமூர்த்தி போகரிடம் விசாரிக்க ஆரம்பித்தார். ‘நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர்’. ‘சிங்கத்திற்கு ஞானம் கொடுத்து அரசனாக்கினீர்’. ‘மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர்’. ‘உரோமாபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர்’. இதையெல்லாம்விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே. நீர் செய்த நூலை சொல்வீராக எனக்கேட்டுக் கொண்டார். அவற்றையெல்லாம் போகர் விளக்க, போகரின் நூலாழத்தினையும், பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.போகர் எழுதியதை போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த சிவபெருமான் போகரின் முயற்சியை ஆசீர்வதிக்கவே செய்தார்.
அதற்குப் பிறகு போகரின் புகழ் பல மடங்கு பெருகியது. பலரும் போகரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர். மொத்தத்தில், மனித சமூகத்தை இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே தேவர்களுக்கும், கந்தர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.நமது அண்டை நாடான சீன தேசமும் நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும் புவியியலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால் இவ்விரு தேசங்களிலும் மூலிகைச் செல்வங்கள் மிகுந்து காணப்பட்டன. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே போ-யாங் என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து சீனர் ஆகவே வாழ்ந்தார் என்றும் ஒரு தகவல் உண்டு.மூலிகை மருத்துவம், அக்குபங்சர் மருத்துவ முறைகளை சீனர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் போகர் ஆவார். தன்னுடைய பாடலில் பொன்னூசி திறவுகோல் மற்றும் வர்மஊசி மருத்துவம் என்றும் அக்குபங்சர் மருத்துவத்தை குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் இதனை பழனி பாலதண்டாயுதபாணி வழிபாட்டில் வழிபாட்டு முறையாகவே செயல்படுத்தி உள்ளார்.சீனர்கள் இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய் கொழுப்பு காரம் புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு இனிப்பு கசப்புஎன்று அறுசுவைகள் உண்டு. ஆனால் சீனர்களிடம் அவ்வாறு இல்லை. அவர்களது உணவு முறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும் எலும்பு நரம்பு இவைகளை வலுவாக வைத்துக் கொள்ளத்தக்கதாகவும் இருந்தமையால் அவர்களிடம் பல வித்தியாசமான பயிற்சி முறைகள் இருந்தன. அதில் ‘ரஜோலி’ என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும் போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்து போயின.
பின்னர் அவரைத் தேடி வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணியார் போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு ஆகாய மார்க்கமாக பழனி அருகே உள்ள கன்னிவாடி மலையை வந்தடைகிறார். சகலவித கலைகளையும் மறந்து ஒரு சாதாரண மனிதரைப்போல் உள்ள தனது குருநாதர் போகரை எண்ணி புலிப்பாணி கண்ணீர் வடிக்கின்றனர். அவரைத் தேற்றி உனக்கு அஷ்டமாசித்திகளும் கைவரப்பட்டுள்ளது சீடனே. எனக்கு நீ குருவாக இருந்து அவற்றை போதித்து விட்டால் நான் மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுவேன் என்று கூறுகிறார். அதன்பிறகு, குருநாதர் போகருக்கு அவரிடம் கற்றதை உபதேசித்து அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். அதேவேளையில், ஒரு சீடன் குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப்பிழையில் முடிந்து அவனையே சாபத்திற்கு ஆளாக்கி விடும் என்பதால் புலிப்பாணி குருநாதரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பிறகு போகர் ஒரு புத்துயிர்ப்புடன் எழுந்தார். பலவித அனுபவங்களால் பழுத்த ஞானி ஆகிவிட்ட போகர் இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே அவருக்கு முக்தியும் கிட்டியது.பல சித்த புருஷர்களைப்போல் போகரும் ஒரு சிவத் தொண்டரே. அதேசமயம் அன்னை புவனேஸ்வரியை தியானித்து அவள் அருளையும் பெற்றவர். அன்னை புவனேஸ்வரியின் உபதேசம் கேட்டு பழனி மலையில் தவம் செய்து முருகனை ‘பாலதண்டாயுதபாணியாகவே’ தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தான் தரிசித்த பாலதண்டாயுதபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை வடித்தார். பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம்.
அவைகளை உரிய முறையில் சேர்த்து இணைத்தால் தான் உறுதியான ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதில், இன்னும் நுட்பமான தகவல் என்னவென்றால் எட்டுவிதமான சிறு சிறு பாஷாணங்களை ஒன்றாக்கி, அதைப்போல மொத்தம் 72 விதமான பாஷாணங்களை 9 முக்கிய பாஷாணமாக மாற்றி அதனை நவபாஷாணமாக மாற்றியவர்.இவ்வாறு ஒன்பது உயர்வான பாஷாணங்கள் கொண்டு போகர் உருவாக்கியதுதான் பழனி மலை முருகனின் மூலத்திருஉருவம். முருகப்பெருமான் கூறியபடியே 72விதமான பாஷாணங்களை ஒன்பது விதமான முக்கிய பாஷாணங்களாக மாற்றி பால தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து முருகப்பெருமான் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு செய்ததோடு அல்லாமல் மூலத்திருஉருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமம்மாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் மகாகுரு போகர். மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது முக்கிய பாஷாணங்களால் பாலதண்டாயுத பாணியை செய்து கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கியவர் போகர் என்றும் குறிப்பிடுவர். பாலதண்டாயுதபாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும், நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுவது இந்த மூலத்திருவுருவில் அடங்கியிருக்கும் மற்றுமொரு அதி சூட்சுமமான நுட்பமாகும். பாலதண்டாயுதபாணி திருவுருவை நயனங்களால் பார்த்தால் கூட போதும், அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு கண்வழியாக உடம்பின் உள்ளும் உடம்பின் புறத்திலும் படிந்து மனிதருக்கு நலமே ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் நவரசங்களால் ஆனது. மொத்தத்தில் போகர் என்றால் ‘நவநாயகர்’ என்றே குறிப்பிடலாம்.இதைப்போன்று நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை உருவாக்கியவரும் போகரே என்றும் ஒரு செய்தி உண்டு.அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
- போகர் 12000
- சப்த காண்டம் 7000
- போகர் நிகண்டு 1700
- போகர் வைத்தியம் 1000
- போகர் சரக்கு வைப்பு 800
- போகர் ஜெனன சாகரம் 550
- போகர் கற்பம் 360
- போகர் உபதேசம் 150
- போகர் இரண விகடம் 100
- போகர் ஞான சாராம்சம் 100
- போகர் கற்ப சூத்திரம் 54
- போகர் வைத்திய சூத்திரம் 77
- போகர் மூப்பு சூத்திரம் 51
- போகர் ஞான சூத்திரம் 37
- போகர் அட்டாங்க யோகம் 24
- போகர் பூஜாவிதி 20.
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை.போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார்.பழனி மலையில் பாலதண்டாயுதபாணி சன்னதியின் தென்மேற்கு மூலையில் மகாகுரு போகர் நிர்விகல்ப சமாதி அடைந்தார்.